Published: 09 பிப் 2018

தங்கம் – உடன்பிறப்புக்களின் அன்பிற்கு உச்சபட்ச அந்தஸ்து

சகோதர - சகோதரிகள் தமக்கிடையில் ஒரு விசேஷமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஒரு தருணத்தில் அவர்கள் ஒரு பொம்மையை உடைப்பார்கள், இன்னொரு தருணத்தில், அமைதியாக ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள். ஒவ்வொரு வருடமும், இந்துக்கள், இந்த சிறப்புப் பந்தத்தை, ரக்ஷா பந்தன் மற்றும் பாய் டூஜ் என்ற பண்டிகைகள் மூலம் கொண்டாடுவார்கள்.

பாய் டூஜ் ஆனது, தீபாவளி அதிரடி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பேரார்வத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையானது, வெவ்வேறு பிராந்தியங்களில் 'பாய் போட்டா’, 'பாய் பிஜ்’, ’பாவ் பிஜ்’, 'பத்ரு த்வ்திய’, 'பத்ரி தீத்யா', 'பாய் டூஜ்' போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பெயர்கள் மாறினாலும் இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் மாறுவதில்லை.

இந்து புராணத்தின் படி, யமன், இறப்பின் தெய்வம் ஆவார். இவர், தனது சகோதரியான யமியை நீண்ட காலமாக பிரிந்திருந்த பிறகு, இந்த விசேஷ நாளில் அவரை சந்திக்கச் சென்றார். யமி அவருக்கு ஆரத்தியெடுத்து திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றதுடன், அவருக்கு விசேஷ உணவுகளை சமைத்துப் பரிமாறினார். இதனை மெச்சிய யமன், தங்களது சகோதரியிடம் ஆரத்தி மற்றும் திலகம் பெற்ற சகோதரர்களை எவராலும் பயமுறுத்த இயலாது என்று அறிவித்தார். இன்னொரு புராணக் கதை, கிருஷ்ணர், நரகாசூரனை கொன்ற பிறகு தனது சகோதரியான சுபத்திரையிடம் திரும்பிச் சென்றதாக குறிப்பிடுகிறது. சுபத்திரையும், தனது சகோதரர் கிருஷ்ணரை ஆரத்தி, திலகம், இனிப்புகள் மற்றும் மலர்கள் ஆகியவற்றுடன் வரவேற்றார்.

இந்த காரணத்திற்காக, இன்றும் கூட பாய் டூஜ் பண்டிகை தினத்தன்று சகோதரிகள் ஆரத்தி மற்றும் திலகமிடும் சடங்கினை செய்கின்றனர். அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் இந்தப் பண்டிகையானது, சகோதர – சகோதரிகள் இடையிலான உறவை புதுப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.

இந்த நாளில் சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கு ஒரு பரிசு தருவதும் வழக்கம். இது பணமாகவோ அல்லது தங்கம் போன்றதொரு மதிப்புமிக்க பொருளாகவோ இருக்கும். இந்தியாவின் பெரிதும் விரும்பப்படுகின்ற உலோகத்தில் காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள் போன்ற பல்வேறு ஆபரண வடிவங்கள் உடன்பிறப்புகளிடம் மிகச்சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது. தங்கத்திலான ஒரு பொருள், கலைநயமிக்க வடிவமைப்பு மற்றும் நேர்த்தியைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒரு ஸ்திரமான முதலீடாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கம் பெருமளவு மதிப்புள்ளதாகவும் முதலீட்டிற்கு மிகவும் விருப்பமானத் தேர்வாகவும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தீபாவளி சமயத்தின் போது தங்கம் வாங்குவதற்கான பாரம்பரியம், சரியான காரணங்களுக்காக தொடர்கிறது. இந்த மஞ்சள் உலோகம் நீண்டகாலத்திற்கு கணிசமான அளவில் இலாபத்தை அளித்துள்ளது. மேலும், அது கடினமான காலங்களில் அத்தியாவசிய நிதி பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. இதனோடு, காலத்திற்கு அப்பாற்பட்ட அழகும் சேர்ந்துள்ளதால் பெருமளவிலான மக்கள் மத்தியில் தங்கம் பிரபலமாக உள்ளது. நிச்சயமாக இது உடன்பிறந்தவர்களுக்கானது.