Published: 27 செப் 2017

விலங்குகளுக்கான ஆபரணங்கள் – ஒரு தனித்துவமான பாரம்பரியம்

கடவுளை மகிழ்விப்பதற்காக, மங்களகரமானவை மற்றும் புனிதமானவை என்று நம்பப்படுகிற சடங்குகளை பிரமாண்டமாக நடத்தி, இந்தியாவில் ஒவ்வொரு திருவிழாவும், நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சடங்குகளில், தங்க ஆபரணங்களால் கால்நடை மற்றும் விலங்குகளை அலங்கரிக்கும் தனித்துவமான ஒரு பாரம்பரியம் உள்ளது. இது ஒரு சுவாரஸ்யமான மரபாகும், இது ஆண்டு முழுவதும் சமுதாயத்திற்காக சேவை செய்யும் விலங்குகளுக்கு அர்ப்பணிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்தக் கட்டுரையில், இந்தச் சடங்குகள் மற்றும் மரபுகள் தொடர்பான சில சுவாரஸ்யமான உண்மைகளை உங்களுக்கு அளிக்கிறோம்:

  • யானைகளை தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பதன் மூலம் தங்கள் பண்டிகைகளையும் பிற நிகழ்வுகளையும் கேரளாவின் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் கொண்டாடுகிறார்கள். கடவுளின் சொந்த நாட்டைச் சேர்ந்த கைவினைஞர்கள் தங்க அம்பாரிகளையும், சிறிய குடைகளையும், கழுத்தணிகளையும் யானைகளுக்கு உருவாக்குகின்றனர். ஒரு அற்புதமான திருவிழாவில், இந்தத் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 150 யானைகள் ஊர்வலத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • வட மற்றும் மேற்கு இந்தியாவில் திருமணப் பாரம்பரியம் என்பது குதிரைகள் இல்லாமல் முழுமையடையாது. குதிரை அலங்காரத்திற்காக நிறைய பணத்தை குடும்பத்தினர்கள் செலவழிப்பது என்பது ஒரு மரபாகும். குதிரைகள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது; குடும்பத்தின் செல்வச்செழிப்புக்கு ஏற்ப, ஆடம்பரமான மற்றும் பகட்டான ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. பொதுவாக நெற்றியில் அலங்காரம் செய்யப்படுகிறது, மேலும் சில நேரங்களில் குதிரையின் முழங்கால்கள் கூட தங்க ஆபரணங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • ராஜஸ்தானின் புஷ்கர் ஒட்டகக் கண்காட்சி என்பது அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களைக் கொண்டிருக்கும். இந்தத் திருவிழாவில் சில ஒட்டகங்களானது தங்கக் கொலுசுகள் மற்றும் பிற தங்கம் பூசப்பட்ட அல்லது வண்ணமயமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு முக்கிய கண்காட்சியாகும்.
  • மகாராஷ்டிராவில், கோவர்தன் திருவிழாவின் போது, பக்தர்கள் ஆபரணங்களால் பசுக்களை அலங்கரித்து வழிபடுகின்றனர். சில இடங்களில், பணக்கார விவசாயிகள் பசுக்களை தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பதும் உண்டு.
  • சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாயிகள், போலா என்று அறியப்படும் ஒரு பிரபலமான காளை-வழிபாட்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில், காளைகள் முதலில் கழுவப்பட்டு, பின்னர் சால்வைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. கோவர்தன் விழாவைப் போலவே, பணக்கார விவசாயிகளும் மற்ற செல்வந்த பக்தர்களும் தங்க ஆபரணங்களால் கால்நடைகளை அலங்கரிக்கின்றனர்.

கடவுளர்களையும், தேவியர்களையும் ஆராதிக்கவும், மகிழ்ச்சிப்படுத்தவும் இந்தியாவின் வெவ்வேறு சடங்குகளில் பல்வேறு நன்கொடைகள் அளிக்கப்படுகின்றன. பசுக்கள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை அலங்கரிப்பது என்பது இயல்பிலே உள்ள தெய்வ நம்பிக்கைகளை அடையாளப்படுத்துகின்றன. இந்தச் சடங்குகளானது தெய்வ பக்தி மற்றும் தங்கத்தின் மங்களகரமான தன்மை ஆகியவற்றால் தோன்றுகின்றன.