Published: 12 செப் 2017

பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் விலைகள் உயருமா?

பண்டிகைக் காலத்தின்போது இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் ஒரு போக்கு உள்ளது. இது விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை அதிகரிப்புக்கு இது வழிவகுக்கும் என்று பலர் நம்புகின்றனர். தேவை அதிகரிப்பு என்பது உண்மையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, முதலில் நாம் தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா அதன் தங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதிகளை சார்ந்துள்ளது. தங்கத்தின் உற்பத்தி என்பது மிக மிக குறைவாக உள்ளது, மேலும் கோலார் தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டவுடன் சொல்லிக்கொள்ளும்படியான உற்பத்தி முடிவுக்கு வந்தது. தங்கத்தை சுரங்கத்தில் வெட்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றாலும், இது இன்னும் பலன்தரும் முடிவுகளை வழங்கவில்லை. அவ்வாறு நடந்தாலும், இந்தியாவின் அதிக அளவிலான தங்கத்தின் தேவை காரணமாக, அது இறக்குமதியில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

எனவே, இறக்குமதிகளின் மூலமே தங்கத்தின் அனைத்துத் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்வதால், தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் சர்வதேச விலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தங்கத்தின் இந்த சர்வதேச விலையில், நாம் தற்போதுள்ள வரிகளையும், கட்டணங்களையும், நாணய விகிதத்தையும் (ரூபாய் விகிதம் Vs டாலர்) சேர்க்கிறோம், இருப்பினும் அரசாங்கத்தின் வரிகள் (கட்டணங்கள் மற்றும் தீர்வைகள்) அடிக்கடி மாறாது; அதனால், தங்க விற்பனையாளர்களிடம் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது இரண்டு விஷயங்கள் ஆகும்: பணப்புழக்கம் மற்றும் தங்கத்தின் சர்வதேச விலை.

இந்த இரண்டு காரணிகளும் தங்கத்தின் விலையில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

சர்வதேச விலை

தங்கம் என்பது உலகளாவிய சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது, மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கமானது சந்தை விலையால் தீர்மானிக்கப்படுகிறது, இது 'ஸ்பாட் விலை' என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, உலகளாவிய சந்தைகளில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் என்பது 1250 டாலர் விலைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது அதிக விலையில் வர்த்தகம் செய்யப்பட்டால், அதாவது, சந்தையில் விலை அதிகரித்து, மற்ற அனைத்து காரணிகளும் மாறாமல் இருக்கும்பொழுது, இந்தியாவில் தங்கத்தின் விலை உயரும். மறுபுறத்தில், சர்வதேச தங்க விலை என்பது பணவீக்கம், வட்டி விகிதங்கள், பணத்திற்கு எதிராக டாலர் செயல்பாடு, பொருளாதாரத் தரவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. புவிசார் அரசியல் அழுத்தங்கள் என்பது தங்கத்தின் விலையை பாதிக்கக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ஆகும், ஆனால் அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழாது. தேவை மற்றும் வழங்கல் ஆகியவையும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பணப்புழக்கம்

டாலருக்கு எதிரான ரூபாயின் இயக்கம் என்பது இந்தியாவில் தங்கத்தின் விலைகளில் மாறுபாடு ஏற்படுத்தும் மற்றொரு காரணியாகும். இதை ஒரு உதாரணத்துடன் மேற்கோள் காட்டுவோம். டாலரின் மதிப்புக்கு ஈடாக 65 ஆக இருக்கும் இந்திய ரூபாய், படிப்படியாக 66 ரூபாய் என அதிகரித்தால், தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளும் மாறாமல் இருப்பதாக வைத்துக்கொண்டால், இந்தியாவில் தங்கத்தின் விலைகள் அதிகரிக்கும். இதேபோல், ரூபாயின் மதிப்பானது 65-ல் இருந்து 64 ஆக மாறினால், இந்தியாவில் தங்கத்தின் விலை குறையும். கடந்த ஒரு ஆண்டில், ரூபாய் மதிப்பானது 66-ல் இருந்து 64.66 வரை அதிகரித்துள்ளது, இதனால் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.

முடிவுரை

எனவே, பண்டிகைக் காலம் என்பது தங்கத்தின் விலையை அதிகரிக்கிறதா; "இல்லை" என்பதே பதிலாகும். தங்கத்தின் விலை என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது, தங்கத்தின் விலைகளில் உலகளாவிய இயக்கம் என்பதே இவை அனைத்திலும் மிகப்பெரியதாகும்.