Published: 17 ஆக 2018

முகலாய தங்க நகைகள் எப்படி நேர்த்தியாக மீட்டமைக்கப்பட்டன

Women Wearing Traditional Mughal Gold Jewellery

முகலாயர்கள் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தனர் மேலும் அவர்களுடன் அபூர்வமான திறமையும் செயல்திறனும் கொண்ட கைவினைக் கலைஞர்களையும் அழைத்து வந்தனர் இதன் மூலம் அந்த காலத்தின் தங்க நகைகளும் நகை வடிவமைப்புக் கலையும் புத்துயிர் பெற்றது. அந்த சகாப்தத்தின் மிகச் சிறந்த பொற்கொல்லர்கள் முகலாயர்களின் கீழ் பணிபுரிந்தனர். முகலாய நகைகள் அழகாக செதுக்கப்பட்டிருந்தன, மேலும் அவற்றின் வடிவமைப்பில் உள்ள நுட்பமான வேலைப்பாடுகளின் அளவானது அவற்றை தனித்து அடையாளப்படுத்தியது.

அந்த கால நகைகள் ஆற்றல் மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருந்தது. ராஜ குடும்ப உறுப்பினர்கள் கனமான ஆபரணங்களான நகைகள் பதிக்கப்பட்ட தலைப்பாகை, மெட்டி, நெக்லஸ் போன்றவற்றை அணிவதன் மூலம் அவர்களுடைய அந்தஸ்தை காட்சிப்படுத்தினர். முகலாயர்கள் மத்திய ஆசிய நகை வடிவமைப்புக்களை அறிமுகப்படுத்தினர், இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய பாணி கலவையில் உருவாக்கப்பட்ட நகை வடிவமைப்புகள் முன்னேற்றமடைந்தன.

பல முகலாய மன்னர்கள் ராஜபுத்திரப் பெண்களை மணந்தனர், இதன் விளைவாக ராஜபுத்திர கைவினைக் கலைஞர்கள் முகலாய ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்தப் புதிய ஒன்றிணைப்பு முகலாய நுணுக்கமான வடிவமைப்புகளும் ராஜபுத்திரர்களின் நுட்பமான விவரங்கள் கொண்ட நகை வடிவமைப்புகளும் ஒருங்கிணைய வழிவகுத்தது.

முகலாய நகைகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்கள்

புகழ்பெற்ற குந்தன் நகைகளை முகலாயர்கள் பிரபலப்படுத்தினர். அறை வெப்பநிலையில் தங்கத்தில் கற்களை பதித்தல் முகலாயர்களின் முத்திரை நகை தயாரிப்பு தொழில்நுட்பமாகும். குந்தன் என்கிற வார்த்தைக்கு மிகவும் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் என்பது பொருளாகும், எனவே குந்தன் நகைகளில் உயர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தூய உருக்கிய தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

பகட்டான ராஜஸ்தானி நகை வடிவமான ஜடாவ், முகலாய நகைகளில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. நெகிழ்வுத்தன்மைக் கொண்ட தங்கத்தின் மீது கற்களைப் பதிக்க இதில் மூன்று – நிலை பணி செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.

நகைகளின் மீது கனிமங்களை பூசுதல் அல்லது மீனாக்காரி எனப்படும் கலை முகலாயர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது. மீனாக்காரி என்பது அதிக நேரத்தை விழுங்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த முறையில் ஒரு நகையின் இரண்டு பக்கங்களிலும் மலர்களின் வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதைத் தவிர, ஃபிலிக்ரீ (உள்ளே தங்கக் கம்பிகளால் பின்னிப் பிணைக்கப்பட்ட நகைகள்) மற்றும் தேவா (உருக்கிய கண்ணாடி மீது நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வைத்து நகை தயாரித்தல்) போன்ற சிக்கலான தொழில்நுட்பங்கள் முகலாயக் கைவினைக் கலையின் முன்மாதிரியான மற்றும் தனித்தன்மையான வடிவமைப்புகளைக் காட்டுகின்றன.

மிகச் சிறந்த முகலாய தங்க நகைகள்

  • முகலாய நகை வடிவமைப்புகளின் மிகப் பொதுவான வடிவமைப்பு பிறை வடிவம் மற்றும் தண்டு ஆகும். காதணிகள் பிறை வடிவத்தில் மேலே ஒரு சிறிய தண்டுடன் ஒட்டுமொத்த காதையும் மூடும் வகையில் தயாரிக்கப்பட்டன.
  • முகலாய மன்னர்களால் அணியப்பட்ட பட்டுத் தலைப்பாகை தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
  • மணிக்கட்டிற்காக ஆபரணங்கள் (கடையங்கள், வளையல்கள், காப்புகள்) பெரும்பாலும் கனிமப்பூச்சு செய்யப்பட்ட தங்கத்தில் விரிவாக்கப்பட்ட நுட்பமான மற்றும் நேர்த்தியான மலர் வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டன
  • பேரரசர்களால் அணியப்பட்ட மிகப்பெரிய மோதிரங்கள் தூய்மையான தங்கத்தால் அல்லது தங்கப் பூச்சு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன.
  • முகலாய அரச குடும்பப் பெண்கள் பெரும்பாலும் நுட்பமாக செதுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கொலுசுகளை அணிந்தனர்.
  • முகலாய காலத்தில் இருந்த மிகப் பிரபலமான தங்க ஆபரணங்களில் ஒன்று ‘நத்’ ஆகும்.
  • ரத்தினங்களும் முத்துக்களும் கோர்க்கப்பட்ட இந்த வட்ட வடிவ தங்கக் கம்பியால் செய்யப்பட்ட மூக்குத்தி வளையத்தை ஒவ்வொரு முகலாயப் பேரரசியும் அணிந்திருந்தார்.
  • ராஜ பரம்பரைப் பெண்களால் அணியப்பட்ட வங்கிகள் பிணைப்புகள் அல்லது சரங்களால் சரி செய்யக்கூடியதாக இருந்தது, மேலும் இது தூய தங்கம் அல்லது தங்க மூலாம் பூசப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.
  • ‘கரன்பூல்’ ஜிமிக்கிகள் இந்த கால கட்டத்தில் மேம்பாடு அடைந்தது; இவை ஒரு சங்கிலி மற்றும் அழகிய பூ வேலைப்பாடு கொண்ட பதக்கத்துடன் இணைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.

முகலாயர்களின் காலத்தில், இந்தத் தங்க நகை வடிவமைப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் அலங்கார வடிவமைப்புகள், வட இந்தியா முழுவதும் குறிப்பாக இன்றைய நவீன மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிஸா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஆனால் இன்று முகலாய தங்க நகைகளின் அரச பாரம்பரிய வடிவமைப்பகள் சர்வதேச எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகிறது.