Published: 09 பிப் 2018

முகலாய தங்க நகைகள், புத்துயிர் பெற்ற ஆர்வம்

2008 ஆம் ஆண்டில், அஷுடோஷ் கோவாரிகரின் வரலாற்று திரைப்படமான ஜோதா அக்பர் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பாராட்டப்பட்டனர், செட் அலங்காரம் போற்றப்பட்டது, உடையலங்காரத் துறை பாராட்டுக்களைத் தட்டிச் சென்றது. உண்மையில், அதன் பிறகு ஒரு பேஷன் டிரெண்ட் தலையெடுத்தது. இந்த முக்கியக் கதாபாத்திர ஜோடி அணிந்திருந்தது போன்ற அற்புதமான தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகளால் மக்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ள விரும்பினர். அவர்கள் அப்படி செய்யக்கூடாதா என்ன?

புகழ்பெற்ற ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், முகலாய வம்சம் இந்தியாவை ஆண்டது. அரச வம்சத்தினர் கலைகள், உணவு, ஆடை மற்றும் கற்கள் பதித்த தங்க நகைகள் ஆகியவற்றில் நாட்டமுள்ளவர்களாக இருந்தனர். இத்தகைய தொழில்களுக்கிருந்த முக்கியத்துவம், படைப்பாற்றல் மற்றும் முகலாயர் நகைகள் என்பதை எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு தனித்துவமான கலைநயத்திற்கு வித்திட்டன.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நகைத் தொழில் பெரும் வளர்ச்சி கண்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பேரரசர்கள் மற்றும் பேரரசிகள் மட்டுமல்லாமல், அரசவை மங்கைகள் மற்றும் உயர் பதவி வகித்த பிரமுகர்களும் கற்கள் மற்றும் மணிகள் மிகுந்த நகைகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டனர். விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொண்டிருப்பது ஒருவரின் பதவிக்கான குறியீடாக இருந்தது. அந்நாளைய பெரும் கனவான்கள் வசித்த வீடுகள், மிகச்சிறந்த நகைகளை உருவாக்க நகைத் தயாரிப்பாளர்களை தனிப்பட்ட முறையில் பணியமர்த்தவும் செய்தன.

முகலாய நகைகள் இந்திய கலை நுணுக்கம் மற்றும் வளைகுடா நாடுகளின் நேர்த்தி ஆகியவற்றின் கலவையாகும். முகலாய நகைகளை உண்மையில் வேறுபடுத்திக் காட்டுவது, அவற்றின் மிகையான கற்கள் வேலைப்பாடு மற்றும் விரிவான எனாமல் வேலைப்பாடு ஆகும். பெரிய விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் மற்றும் அரிய கல்மணிகள் தங்க நகைகளில் பொருத்தப்பட்டன. பறவைகள், மலர்கள் மற்றும் பார்ஸ்லே ஆகியவை மிகவும் பொதுவான வடிவமைப்புகளாக இருந்தன. முகலாயர்களின் கைவினைத்திறனில் சரிகை சித்திர வேலை (filifree) மற்றும் தேவா (thewa) எனப்படும் இதர தனித்துவமான வடிவங்களும் அடங்கும்.

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதன் மதிப்பு வாய்ந்த நகைகளில் பெரும்பாலானவை விற்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இத்தகைய ஆடம்பரம் வீழ்ச்சியடைய, சில முகலாய நகைகள் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் முகலாய நகைகள் மற்றும் அதன் கலை நுணுக்கங்கள் மறக்கப்பட்டன.

இன்று, முகலாயர் பாணியிலான நகைகள் மீண்டும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ராணி போன்ற கம்பீரத் தோற்றத்திற்காக மணமகள்கள் தங்கள் திருமணத்தின் போது முகலாய நகைகளை அணிகிறார்கள். இந்தப் போக்கு, விலை அதிகமாக இருந்தாலும், ஆர்வமுள்ளவர்கள் வாங்க முனைப்புக் காட்டுவதால் தற்போது சூடுபிடித்துவருகிறது.

பல்வேறு நகைக்கடைகளில் கிடைக்கின்ற தற்போதைய முகலாய நகைகள் நவீனமாக இருந்தாலும், அவற்றில் கல்மணி வேலைப்பாடு மற்றும் எனாமலிங் இன்றும் அச்சு அசலாக உள்ளன. இவற்றின் பாரம்பரிய வலிமையே இவையாக இருக்கக்கூடும்.