Published: 27 செப் 2017

இந்திய கட்டிடக்கலை அற்புதங்களில் மறைந்துள்ள தங்கப் பொக்கிஷங்கள்

Gold Treasure In Architectural Marvels Of India

"அலிபாபாவும், நாற்பது திருடர்களும்" என்பது நாம் சிறுவயதில் கேட்ட மிகவும் புதிரான கதை ஆகும், அப்படித்தானே? ஒரு புதையல் வேட்டை என்பது ஒரு பெரிய சாகசம் போல் இருக்கிறது. நீங்கள் கண்டுபிடிப்பதற்காக உண்மையாகவே புதையல் காத்திருக்கிறது (உண்மையில்!) என்று நாங்கள் சொன்னால் எப்படி இருக்கும்!

பல வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் இந்தியாவை சூறையாடினர், ஆனால் இரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நமது புத்திசாலி அரசர்களின் பெரும் பொக்கிஷங்களை அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை! ஏன் தெரியுமா? அத்தகைய 'இரகசிய' புதையல் உள்ள ஐந்து இடங்களை நாம் அறிவோம். அதன் பட்டியல் பின்வருமாறு: (சிறந்ததைக் கடைசியாக வைத்திருக்கிறோம்!)

 1. கோதி அரசர் அரண்மனை, ஹைதரபாத்

  2008 ஆம் ஆண்டின் பட்டியலில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது ஹைதராபாத்தின் கடைசி நிஜாமான மிர் ஓஸ்மான் அலியை 210.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புள்ள சொத்துக்களுடன் 'உலகின் ஐந்தாவது செல்வந்தராக' பட்டியலிட்டது. 1937-ல், அவரை 'உலகின் பணக்கார மனிதன்' என்று டைம் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. அவர் தனது பெரும்பாலான காலத்தை கோதி அரசர் அரண்மனையில் கழித்தார், அங்கு உள்ள பாதாள அறைகள் முழுவதும் புதையல் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 2. ஸ்ரீ மூகாம்பிகை கோவில், கர்நாடகா

  கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொல்லூர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் வருடாந்திர வருமானம் என்பது ரூ.17 கோடியாகும்! கோவிலின் உள்ளே உள்ள சர்ப்பம் என்பது அதன் கீழே மறைந்திருக்கும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும் என்று குருக்கள் நம்புகின்றனர். புதையலைத் தவிர, இந்தக் கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு என்பது ரூ. 100 கோடிக்கு அதிகமாகும்!

 3. பாலகுவிலா, ஆல்வார், ராஜஸ்தான்

  முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை நாடு கடத்திய பொழுது, ராஜஸ்தானில் உள்ள பாலகுவிலா, ஆல்வார் என்ற ஊரில் அவர் அடைக்கலம் புகுந்தார், அந்தக் காட்டில் உள்ள கோட்டையில் அவர் தனது புதையலை மறைத்து வைத்திருந்தார் என உள்ளூர் நாட்டுப்புறக் கதை கூறுகிறது. அந்தப் புதையல் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை; அவற்றில் ஒரு பெரும் பகுதி இன்னும் அங்கு புதைந்துள்ளது. ஒரு ஒற்றை மரகதக் கல்லில் வெட்டி செய்யப்பட்ட ஒரு பானம் அருந்தும் கோப்பை என்பது இந்தப் புதையலில் உள்ள மிகவும் மதிப்புமிக்க ஒன்று ஆகும்!

 4. ஜெய்கார் கோட்டை, ஜெய்ப்பூர்

  ஜெய்ப்பூரின் முன்னாள் ஆட்சியாளரான மான் சிங் என்பவர் அக்பரின் அரசவையின் நவரத்தினங்களில் ஒருவராகவும், அவரது இராணுவத் தளபதியாகவும் இருந்தார். 1580களில் ஆப்கானிய படையெடுப்பில் வெற்றி பெற்று திரும்பிய பின்னர், அக்பருடன் பகிர்ந்து கொள்ளாமல், ஜெய்கார் கோட்டை வளாகத்தில் புதையலை மறைத்து வைத்ததாக புராணக்கதை கூறுகிறது. அதைத் தேடுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார், ஆனால் அப்பொழுது ஒன்றும் கிடைக்கவில்லை. அதில் உள்ள புதையல்கள் பிரதமரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின, ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அந்த இரகசியம் புதிராகவே தொடர்கிறது.

 5. பத்மநாபசுவாமி கோவில், கேரளா

  உலகின் பணக்கார கோவிலாக அறியப்பட்ட இது, 2011ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அதன் பாதாளச் அறை A (ஆறு பாதாள அறைகளில் ஒன்று) திறக்கப்பட்ட பிறகு சர்வதேசப் புகழ் பெற்றது. அந்தப் புதையலில் சுமார் 22 பில்லியன் டாலர், அதாவது 14,16,69,00,00,000 ரூபாய்கள் மதிப்புள்ள கடவுளுக்கான தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் இருந்தன! இந்தக் கோவிலில் மிகப்பெரிய பாம்புகளால் பாதுகாக்கப்படும் மற்றொரு இரகசிய பாதாள அறை B உள்ளது. அதில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியாது. அதை யார் திறந்தாலும் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புராணம் கூறுகிறது.

“சோனே கி சிடியா” என்ற பெயரை இந்தியா இழந்துவிட்டது என்று யார் கூறியது? இந்தப் புதையல்களைக் கண்டுபிடித்தால், நாம் உலகின் பணக்கார நாடாக ஆகலாம்!