Published: 27 செப் 2017

இந்தியாவின் பொருளாதாரத்தை தங்கம் எவ்வாறு காப்பாற்றியது

Importance of Gold in Indian economy

பெரும்பாலும், இந்தியா நாடானது ஒரு இறுக்கமான சூழலுக்கு ஆட்பட்டு, அதிலிருந்து மீண்டு எழுகிறது. 1991ஆம் ஆண்டின் இந்தியப் பொருளாதார நெருக்கடி என்பது அப்படியான ஒரு உதாரணமாக இருந்தது.

1980களின் போது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நாணய மதிப்பு குறைக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக பரிமாற்ற விகிதத்தில் கடுமையான சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரிந்தது என்று டாக்டர் அருணாபா கோஷ் எழுதிய ஆய்வு நூலான பாத்வேஸ் த்ரூ ஃபைனான்ஸியல் கிரைசிஸ்: இந்தியா என்பதில் குறிப்பிட்டுள்ளார்.

80களின் நடுப்பகுதியில், இந்தியாவிற்கு பணம் செலுத்தும் சமநிலையில் சிக்கல்கள் தொடங்கியது, அந்த தசாப்தத்தின் முடிவில், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கியானது சர்வதேச கையிருப்புகளை விரிவுபடுத்தி, மதிப்பு சரிவதைக் குறைப்பதன் மூலம் நாணயத்தின் மதிப்பைப் பாதுகாக்க முயன்றது, எனினும் இந்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.

1991-ன் நடுப்பகுதியில், இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்புகள் என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டன: ஜனவரி 1991-ல் 1.2 பில்லியன் டாலர்கள் என்பதில் இருந்து சரிந்து, அதே வருடத்தின் ஜூன் மாதத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தது. மூன்று வாரங்களுக்கான இறக்குமதிக்கு நிதி அளிக்கும் அளவிற்கே இந்தியாவால் முடியும் என்பது இதன் அர்த்தமாகும். அரசாங்கமானது திவாலாகும் நிலையில் இருந்தது, மத்திய வங்கியானது புதிதாக கடன் அளிக்க மறுத்துவிட்டது, மேலும் இந்திய அரசாங்கமானது பெரும்பாலான நாணயங்களுக்கு எதிராக கடுமையாக இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டியிருந்தது, இது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது.

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து 2.2 பில்லியன் டாலர் மதிப்புக்கு அவசரமாக கடன் பெற இந்தியா உடனடியாக முடிவு செய்தது. இந்திய நாடானது தனது 67 தங்கக் கையிருப்புக்களை பாதுகாப்பு பிணையமாக அளித்தது. இந்திய ரிசர்வ் வங்கியானது 47 டன் தங்கத்தை பாங்க் ஆப் இங்கிலாந்து வங்கிக்கும், 20 டன் தங்கத்தை யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து வங்கிக்கும் விமானம் மூலமாக அனுப்பி, 600 மில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் 2,843.5 கோடி ரூபாய்) பணத்தைப் பெற்றது.

தங்கத்துடனான இந்தியாவின் நீண்டகால உறவு மற்றும் நெருக்கமான தொடர்பு காரணமாக, கடன் பெறுவதற்காக தங்கக் கையிருப்புகளை அரசாங்கம் அடமானம் வைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கூக்குரல் எழும்பியது. தங்கத்தை அனுப்பிய பிறகு சந்திரசேகரின் அரசாங்கம் விரைவில் வீழ்ந்தது, ஆனால் தங்கத்தைப் பிணையமாகப் பயன்படுத்திய முடிவானது, பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சீர்குலைவை மேம்படுத்துவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதற்கும் உதவி செய்தது.

18 ஆண்டுகள் வேகமாக முன்னோக்கி வந்து இப்பொழுது பார்க்கலாம். இந்திய அரசாங்கமானது முழுமை நிலைக்கு வந்து, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியுள்ளது - இது 1991 ஆம் ஆண்டின் நெருக்கடியின் போது அடகு வைத்த தங்கத்தின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்த முடிவானது வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான ஒரு அபாயக் குறைப்பு நடவடிக்கையாக செயல்பட்டது மட்டுமல்லாமல், முக்கியமாக இந்திய நாடு மீண்டெழுந்துள்ளதை உலகிற்கு அடையாளம் காட்டியதுடன், பொருளாதார வலுமிக்க தேசங்களின் வரைபடத்தில் இந்தியா மீண்டும் இடம்பெற்றுவிட்டது என்பதை நினைவூட்டியது.

தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியர்களை வழிநடத்தி வருகிறது, மேலும் இந்தியா தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் உதவியுள்ளது.