Published: 01 செப் 2017

விஜயநகரத்தின் இழக்கப்பட்ட புதையல்

ஜனவரி 26, 1565-ல், விஜயநகரத்தின் இந்து பேரரசானது அஹமத்நகர், பெரார், பிடார், பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகியவற்றின் இஸ்லாமிய டெக்கான் சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகளை எதிர்த்து தலைக்கோட்டை போர்க்களத்தில் (வடக்கு கர்நாடகாவில் உள்ள பிஜப்பூரிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது) சண்டையிட்டது. இந்த யுத்தத்தில், விஜயநகர அரசரான ராம ராயர் உயிரிழந்தார், அவரது இராணுவம் தோல்வியடைந்தது.

ஆனால், இந்த போருக்கு பின் என்ன நடந்தது? விஜயநகரத்தை ஆட்சி செய்த வம்சத்தவர்களின் வழிவந்த, 300 ஆண்டுகளுக்கு மேலாக குவிந்திருந்த புதையல்களுக்கு என்ன ஆகியிருக்கும்?. தில்லியின் தெற்கே இருந்த செல்வச் செழிப்புமிகுந்த இந்திய நகரமான ஹம்பி நகரத்தின் தெருக்களில் அவை வெளிப்படையாக விற்கப்பட்டது என்று புராணத்திலும், மற்றும் பழங்கால வருகையாளர்களாலும் கூறப்பட்ட, அந்த அளவுக்கு அதிகமான தங்க பொக்கிஷங்களுக்கு என்ன ஆயிற்று?

பெர்சியாவின் முன்னாள் குடிமகனும், போரின் சாட்சியாளருமான ரஃபியுதின் ஷிராஸி தனது புத்தகமான தஸ்கிராதுல் முலுக்-ல், போர் நிறைவுற்ற 20 நாட்களுக்குப் பிறகு வெற்றியடைந்த இராணுவமானது விஜயநகரத்திற்குள் நுழைந்ததாகக் குறிப்பிடுகிறார். விஜயநகரத்தின் கடைசி நாட்களை நேரில் பார்த்தவரான போர்த்துகீசிய வரலாற்றாசிரியரான டியோகோ டூ கோட்டோ என்பவர், வெற்றி பெற்ற மூன்று நாட்களுக்குப் பின்னர் ஹம்பிக்குள் முஸ்லீம் படைகள் நுழைந்ததாக எழுதுகிறார். கோல்கொண்டாவில் இருந்து மற்றொரு சமகாலத்தவரான பெரிஸ்தா என்பவர், வெற்றி பெற்றவர்கள் ஹம்பிக்கு செல்ல 10 நாட்கள் ஆனது என்று கூறுகிறார்.

அது 3, 10, அல்லது 20 என எத்தனை நாட்களாக இருந்தாலும், விஜயநகரத்தின் தலைநகரத்தை சுல்தானிய இராணுவம் அடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் போரில் மீதம் இருந்த இந்து அரச வம்சத்தினர் ஆகியோர் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கிடைத்தது.

போர்க்களத்தில் இருந்து ஹம்பிக்குத் திரும்பிய பின்னர், இறந்த அரசர் ராம ராயரின் சகோதரரான திருமலை ராயர், உடனடியாக அரச குடும்பத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களோடு சேர்ந்து நகரத்தை விட்டு வெளியேறினார். இந்தப் பரிவாரத்தில் அரசனின் சிம்மாசனத்துடன், எண்ணற்ற குதிரைகள் மற்றும் காளை வண்டிகளுடன் ஏறக்குறைய 550 யானைகள் உட்பட அனைத்திலும் தங்க பொக்கிஷங்களை ஏற்றி கொண்டு வந்தனர். தெற்கு கர்நாடகாவில் உள்ள பெனன்கொண்டாவின் கோட்டையை நோக்கி அவர்கள் நகர்ந்தனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் 2011ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதையலானது, விஜயநகர செல்வத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று நம்பப்படுகிறது. செய்தி அறிக்கைகளின்படி, கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் சில பின்வருமாறு: விலையுயர்ந்த கற்கள் பொதிக்கப்பட்ட 3.5 அடி உயர விஷ்ணுவின் பொன் விக்கிரகம்; நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த கற்கள் பொதிக்கப்பட்ட, ஒரு 18 அடி நீள தங்க சங்கிலி கொண்ட ஒரு தூய தங்க சிம்மாசனம்; 500 கிலோகிராம் எடையுள்ள ஒரு பொன் முடிப்பை; 36 கிலோகிராம் தங்க முக்காடு; தங்கக் கலைப்பொருட்கள், கழுத்தணிகள், தங்க கவசம், வைரங்கள், மாணிக்கங்கள், நீலக்கல், மரகதங்கள், இரத்தினக்கற்கள், மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆன பொருள்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட பல சாக்குகள்; மாணிக்கங்கள் மற்றும் மரகதங்களுடன் கூடிய தங்க தேங்காய் ஓடுகள்; ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள்; மேலும், விஜயநகர சகாப்தத்தின் தங்க நாணயங்கள்.

தக்காணத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரத்தை அடுத்து, மராட்டிய குதிரைப்படை வீரர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களினால், விஜயநகர அரசர்களின் வம்சாவளியினர், தங்கள் புதையலை தெற்கில் தொலைதூரத்தில் உள்ள ஸ்ரீ பத்மனாபஸ்வாமியின் காவலில் மாற்றி வைக்க நேரிட்டது என்று நாடோடிக் கதை கூறுகிறது.