Published: 27 செப் 2017

தங்கத்தின் அதிர்ஷ்டவசமான கண்டுபிடிப்புகள்

தங்கம் ஒரு உலோகமாக இருப்பதால், அது இயற்கையாகவே காணப்படுகிறது மற்றும் அதை உற்பத்தி செய்ய முடியாது. இருப்பினும், பூமியின் மேற்புறத்தில் காணப்படுகின்ற தங்கம், எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால், ஒருவர் தடுக்கி விழும் பொழுது, ஒரு தங்கக் கட்டியின் மீது விழ நேரிடலாம். இருப்பினும், தங்கக் கட்டிகள் என்பது மட்டுமே ஒருவரைச் சுற்றியுள்ள அதிர்ஷ்டமான விஷயம் அல்ல. பண்டைய காலத்தில் இருந்த சாதாரண நபர்கள் தொலைந்த புதையல்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர், இதில் தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கட்டுரையில், தங்கம் நிறைந்த பானைகளைக் கண்டுபிடித்து, தங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி நாம் பார்க்கலாம்.

ஹோக்ஸ்னே புதையல்
வயலில் தனது சுத்தியலை தொலைத்த, இங்கிலாந்தின் சஃபோல்க்-ல் உள்ள ஹோக்ஸ்னே-வை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரு உலோக டிடெக்டரை ஒரு நண்பரிடம் கேட்டு வாங்கினார். 1992ஆம் ஆண்டில் ஒரு நாளில் அவரது சுத்தியலைத் தேடிய பொழுது, உலோக டிடெக்டர் கருவியானது ஒரு சமிக்ஞையை வெளியிட்டது. அந்த நிலத்தின் மேற்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ரோமானிய புதையலைக் கண்டு அந்த மனிதர் இன்ப அதிர்ச்சியடைந்தார். 15,000 ரோமானிய வெண்கல, வெள்ளி மற்றும் தங்க நாணயங்களையும், நூற்றுக்கணக்கான தங்கம், வெள்ளி கரண்டிகளையும், முட்கரண்டிகளையும் மற்றும் பிற நகைகளையும் அவர் கண்டறிந்தார். அந்த நல்ல உள்ளம் கொண்ட விவசாயி தனக்கு உலோக டிடெக்டரை அளித்த நண்பருடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டார், அவர்கள் இருவருக்கும் சுமார் 20 கோடி ரூபாய் கிடைத்தது. அவர்களது கண்டுபிடிப்புகளானது இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சேடில் ரிட்ஜ் சாலை
ஒரு மிக சமீபத்திய கண்டுபிடிப்பு என்பது சேடில் ரிட்ஜ் புதையல் ஆகும், மேலும், இது மிகவும் நம்பமுடியாத கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். 2013 பிப்ரவரியில், கலிபோர்னியாவில் உள்ள சியரா நெவாடா மலைத்தொடருக்கு அருகே தங்க நாட்டில் உள்ள தங்களுடைய கிராமப்புற சொத்துக்களில் ஒரு தம்பதியினர் தங்களது நாயுடன் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் வழக்கமாக வரும் வழியில் நடந்து வந்தபோது, அந்தத் தம்பதியினர் ஒரு பழைய, துருப்பிடித்த உலோக கேன் போல தோற்றமளித்த ஒன்றைக் கண்டனர். ஆர்வத்துடன், அந்தத் தம்பதியினர் அதை ஆய்வு செய்யச் சென்றனர், அப்பொழுது அது ஒரு காலியான, மதிப்பில்லாத குப்பை இல்லை என்று உணர்ந்தனர். கோல்டன் ஈகிள்ஸ் என்றழைக்கப்படும் 20 டாலர் மதிப்புள்ள தங்க நாணயங்களானது அந்தக் கேன் முழுவதும் இருந்தது. அது கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் மதிப்பானது 65 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது.