Published: 01 செப் 2017

ஜஹாங்கிர் தனது மகனின் எடையை தங்கத்துக்கு நிகராக அளந்த பொழுது

ஜூலை 31, 1607 அன்று, இந்தியாவின் முகலாய பேரரசரான ஜஹாங்கீர், தனது மகனின் 15வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தனது மகன் இளவரசர் குர்ராமை தங்க நாணயங்களுக்கு நிகராக எடையிட உத்தரவிட்டார். தங்கத்துக்கு நிகராக எடையை அளப்பது என்பது உண்மையில் ஒரு இந்து மத அரச குல தனித்துவமான 'துலாதனம்' என்பதாகும். புத்திசாலித்தனமான கருத்துக்களுக்கு எப்போதும் வரவேற்பளிக்கும் ஜஹாங்கீரின் தாத்தாவான ஹுமாயூன் அதைப் பின்பற்றினார்.

ஜஹாங்கீரின் தந்தையான அக்பர் சக்கரவர்த்தி, அதை அரசகுல பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆக்கினார். தங்கத்திற்கு நிகராக எடையை அளப்பது என்பது பிராயசித்தமாக, சாந்தப்படுத்தும் சடங்காக நோயால் பாதிக்கப்படும்பொழுதும், மற்ற துரதிர்ஷ்ட நேரங்களிலும் செய்யப்படுகிறது.

ஜஹாங்கீரின் நினைவுக்குறிப்பான துஸுக்-இ-ஜஹாங்கீரியில் உள்ள ஒரு ஓவியத்தில், ஜஹாங்கீரின் அரசவை கலைஞரான மனோகர் என்பவர் இந்த நிகழ்வை விளக்குகிறார். இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியமானது, தங்கம், மாணிக்கங்கள் மற்றும் பிற நகைகளால் சமநிலைப்படுத்தப்பட்ட ஒரு தராசில் இளவரசர் குர்ராம் அமர்ந்திருக்கும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறது. அவருக்கு முன்பு, நகைகள் பொதிக்கப்பட்ட கத்திகள் மற்றும் குத்துவாள்கள், சிறிய தங்க ஜாடிகள், கோப்பை மற்றும் சாஸர்கள் ஆகியவை கொண்ட முட்டை வடிவ மற்றும் செவ்வக தட்டுகள் உள்ளன. மேலும், இரண்டு தட்டுக்களில் விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களால் ஆன கழுத்தணிகள் உள்ளன. ஜஹாங்கீரின் தலைமைத் தளபதியான அப்துல் ரஹீம் கான்-இகானன் என்பவர் இளவரசரின் பின்னால் இருந்த அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜஹாங்கீரின் நினைவுக்குறிப்புகளின் நிறைவுற்ற நகலுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆல்பத்திலிருந்து ஒரு இலை தெளிவாகத் தெரிகிறது.

ஆண்டுக்கு இருமுறை, சூரிய மற்றும் சந்திர ஆண்டுகளின் முதல் நாளில், தன்னையோ அல்லது தனது மகன்களில் ஒருவரையோ தங்க நாணயங்களுக்கு நிகராக எடையிடும் வழக்கம் பேரரசர் ஜஹாங்கீருக்கு இருந்தது. அந்த நாணயங்களானது, பின்னர் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இளவரசர் குர்ராம் வளர்ந்து, ஷாஜஹான் என்ற பட்டத்தை சூடிக்கொண்டார். அவரது மகள் ஜஹானார் தீப்புண்களின் இருந்து குணமடைந்த பொழுது, அவரையும் அதேபோல் எடையிட்டார்.

முகலாய அரசவையில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய சர் தாமஸ் ரோ (1581 - 1644) என்ற ஒரு ஆங்கில தூதர், ஜஹாங்கீரை அவரது பிறந்த நாளில் எடையிடும்பொழுது கண்டார். அவரின் நினைவுக் குறிப்புகளில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "மிகப்பெரிய தங்கச் தராசில் பெரிய சங்கிலிகளும், தங்கத்தால் பூசப்பட்ட குறுக்குவெட்டு உத்தரமும் தொங்கிக்கொண்டிருந்தன. தராசின் விளிம்புகளானது மாணிக்கக் கற்கள் மற்றும் நீலப்பச்சை இரத்தினங்கள் கொண்ட சிறிய கற்களால் அமைக்கப்பட்டிருந்தது, அதே நேரத்தில் தங்க சங்கிலிகள் பெரியதாகவும் பிரமாண்டமாகவும் இருந்தன, ஆனால் பட்டு நாண்களால் வலுவூட்டப்பட்டிருந்தது.”

"பேரரசர் வந்தபோது, அவர் சமணம்போட்டு அமர்ந்திருந்தார். மேலும், அவரது எடைக்கு ஈடாக பல பைகள் அவருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தன, அவை ஆறு முறை மாற்றப்பட்டன." தங்கம், நகைகள், விலைமதிப்பற்ற கற்கள், பொன்னால் நெய்யப்பட்ட ஆடை, பட்டு, சணல்நூல், நறுமணப் பொருள்கள் ஆகிய பல்வேறு பொருட்களைக் கொண்ட ஒரு பைக்கு எதிராகவும் பேரரசர் எடையிடப்பட்டதாக ரோ எழுதினார்.