Published: 10 செப் 2018

அஸ்ஸாமின் பாரம்பரிய தங்க நகை வடிவமைப்புகள்

Assamese Jewellery

தங்க நகை வடிவமைப்பு பல நூற்றாண்டுகளாக அஸ்ஸாமின் புகழ்பெற்ற கலை வடிவமாக இருந்து வருகிறது. இன்றைய நாகரிக நாட்களில் அஸ்ஸாமை அஹோம் ராஜ வம்சம் கிட்டதட்ட 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்தது. அந்த காலகட்டத்தில் பல்வேறு ஆறுகளின் மணலிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கும் நடைமுறையை பிரபலபடுத்திய பொறுப்பு அவர்களையே சாரும். ஒரு தட்டைப் பயன்படுத்தி மணல் படிவங்களிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதில் ஈடுபடும் பாரம்பரிய தங்கச் சுரங்கப் பணி தொழில்நுட்பமாகிய தங்கத்தை கழுவுதல், மற்றும் தங்க உற்பத்தி இரண்டும் இடைக்கால அஸ்ஸாமில் செழிப்படைந்தது.

அந்த காலகட்டத்தில் தங்க நகைகளை அணிதல் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளூர்வாசிகளிடமும் தங்கம் பிரசித்திப் பெற்றதால் இந்த நிலை மெதுவாக மாறியது.

அஸ்ஸாமிய தங்க நகை வடிவமைப்புகள் முக்கியமாக தாவரங்கள், விலங்கினங்கள், வீட்டுபயோகப் பொருட்கள், மற்றும் இசைக் கருவிகளிலிருந்தும் கவரப்பட்டது. இவற்றில் பெரும்பாலான ஆபரணங்கள் பாரம்பரிய முறையில் தங்க முலாம் பூசப்பட்டவை, ஆனால் நவீன தங்க நகைகள் தங்கத்தை அடிப்படைப் பொருளாகவும் பயன்படுத்துகிறது.

இன்றளவும் அதீத புகழ்பெற்ற சில பாரம்பரிய அஸ்ஸாமிய தங்க நகைகளைப் பற்றி இங்கே ஒரு பார்வை:

  • லோகாபரோ

    இந்த முக்கிய ஆபரணம் இல்லாமல் அஸ்ஸாமிய மணப்பெண்ணின் தோற்றம் முழுமையடைவதில்லை – லோகாபரோவில் ஒரு பதக்கமும் மற்றும் ஒரு ஜோடி காதணிகளும் ஒரே மாதிரியான புறாக்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. (பரோ என்றால் புறா என்று பொருள்) இவை தங்கம் மற்றும் மாணிக்க கற்களால் ஆனவை, முதன்முதலில் அஹோம் அரச வம்ச உயர் பதவியாளர்களால் அணியப்பட்டது. நீங்கள் லோகாபாராவை நெருக்கமாகப் பார்த்தால், கனிமப்பூச்சு செய்யப்பட்டிருப்பதை கவனிக்கலாம் (ஒரு மெல்லிய கண்ணாடி இழையை தங்கத்துடன் உருக்கி இணைத்தல் மூலம் தயாரித்தல்).

    மரியாதை: கிராஃப்ட்ஸ்வில்லா

  • கம்கரு

    பூக்களின் வடிவங்கள் பொறிக்கப்பட்டு தங்கத்தால் செய்யப்பட்ட கொக்கி இணைக்கப்பட்ட இந்த காப்பு அல்லது பாரம்பரியமாக ஆண்களால் அணியப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அஸ்ஸாமிய பெண்களுக்கிடையேயும் புகழ்பெற்று வருகிறது. கம்கரு பொதுவாக திருமணம் அல்லது பிஹு போன்ற சிறப்புத் தருணங்களில் அணியப்படுகிறது

  •  முத்திகரு

    தூய தங்கத்தால் செய்யப்பட்ட முத்திகரு கெட்டியான வலிமையான தங்க காப்பு ஆகும், மேலும் இது அஸ்ஸாமிய மணப்பெண்களின் நகைப் பெட்டியில் ஒருங்கிணைந்த ஆபரணமாகும். அதன் உறுதியான தயாரிப்பு காரணமாக முத்திகரு ஒரு கைவிலங்கு வளையல் போன்ற தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. திருமணங்களைத் தவிர பிஹு மற்றும் துர்கா பூஜை. போன்ற பண்டிகைகளின் போதும் அஸ்ஸாமியப் பெண்கள் முத்திக்கருவை அணிந்திருப்பதைப் பார்க்க முடியும்.

  • ஜோன்பிரி

    தங்கத்தாலான பிறை நிலா வடிவ பதக்கம் மற்றும் காதணி ஜோடியைக் கொண்ட ஜோன்பிரி வழக்கமாக கைகளால் செய்யப்படுவதாகும் மேலும் அஸ்ஸாமியப் பெண்களால் திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் அணியப்படுகிறது.

  • காலபோடா

    கோல்போடா அல்லது காலபோடா எனப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கழுத்தணியில் வெவ்வேறு பூக்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். காலாபோடா அடிப்படையில் ஒரு அஸ்ஸாமிய சோக்கர் நெக்லஸ் ஆகும். பல நவீன காலாபோடா வடிவமைப்புகளில் கண்கவர் வண்ணங்களில் தங்க நகைகளுக்கு செய்யப்படும் மீனாகாரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

    மரியாதை: அஸ்ஸாம்வில்லா

  • டோல்பிரி

    டோல்பிரி எனப்படும் இசைக்கருவியால் கவரப்பட்டு அந்த பெயர் சூட்டப்பட்ட இந்த ஆபரணம் அஸ்ஸாமியப் பெண்களுக்கிடையே அதிகப் புகழ்பெற்ற பாணி கழுத்தணிகள் மற்றும் காதணிகள் ஆகும். முரசு (டோல்) வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, தங்க சரிகையால் மூடப்பட்டிருக்கும் இது பாரம்பரிய அஸ்ஸாமிய நகைகளின் பழமையான வடிவமைப்புகளில் ஒன்றாகும்.

  • கெருமோனி

    அஸ்ஸாம் உள்ளூர்வாசிகளால் பரவலாக அணியப்படும் கெருமோனி நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தங்க ஆபரணமாகும். ஒரு பக்கம் அகன்றும், ஒரு பக்கம் குறுகலாகவும் மையத்தில் காலியாகவும் இருக்கும் இந்த ஆபரணம் வட்ட வடிவத்தில் இருக்கும். இந்த வடிவமைப்பு ஆரம்பத்தில் காதணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது பிறகு பதக்கங்களுக்கும் இணைக்கப்பட்டது.

  • பீபா

    டோல் – பிரியைப் போலவே இந்த ஆபரணமும் இசைக்கருவியிலிருந்து கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகும். பீபா என்பது எருமையின் கொம்பில் செய்யப்பட்ட அஸ்ஸாமிய நாட்டுப்புற ஊதுகுழல் இசைக்கருவியாகும். ஊதுகுழலின் வடிவமைப்பும் இந்த நகையைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வழக்கமான பீபா ஜோடி ஆபரணம் தங்கத்தில் வடிவமைக்கப்படுகிறது, அதற்குப் பொருத்தமான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களில் நெக்லஸையும் காதணிகளையும் கொண்டிருக்கும்.

    நுணுக்கமான கைவினைத்திறன் மற்றும் ஆழமான அர்ப்பணிப்பின் விளைவாக, பாரம்பரிய அஸ்ஸாமிய நகைகள் அரிதானதாகவும் அதீத அழகானதாகவும் விளங்குகிறது. இன்றளவும், அஸ்ஸாமிய தங்க நகைச் சந்தை நாடு முழுவதுமுள்ள தங்க நகைப் பிரியர்களால் போற்றப்படும் சில முன்மாதிரியான வடிவமைப்புகளைக் கொண்டது என்கிற பெருமையைக் கொண்டுள்ளது.