Published: 23 ஏப் 2019

தங்கத்தில் எப்படி உங்களால் தவணைகளில் முதலீடு செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்

Gold Investment options in India

தங்க சேமிப்புத் திட்டங்கள், தங்கக் கொள்முதலை மக்களுக்கு மிகவும் கட்டுப்படியாகுமாறு மாற்றியது மட்டுமின்றி எளிதானதாகவும் மாற்றியது. நாடு முழுவதும் பெரும்பாலான தங்க நகைக்கடைக்காரர்களால் அளிக்கப்படும் இந்தத் திட்டங்கள், நீங்கள் இஎம்ஐ செலுத்துவது போல, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்தி வாங்க உங்களை அனுமதிக்கின்றன. திட்டங்களைப் பொருத்து மாதாந்திரத் தவணைகள் மற்றும் செலுத்தும் காலம் வேறுபடும்.

செயல்படும் விதம்

  • இந்த திட்டங்களில் பெரும்பாலானவற்றில், நீங்கள் முதலில் நகைக்கடைக்காரரிடம் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு மாதமும், அந்தக் கணக்கில், ஒரு குறிப்பிட்ட தொகையை, நகைக்கடைக்காரரிடம் உள்ள திட்டங்களுக்கு ஏற்ப செலுத்துவீர்கள். காலவரையின் முடிவில், நகைக்கடைக்காரரிடமிருந்து பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மாதங்களின் தவணைத் தொகையை போனஸ் ஆகப் பெறுவீர்கள். இருப்பினும், சில நகைக்கடைக்காரர்கள் அளிக்கும் திட்டம் வேறுபட்டிருக்கலாம். இறுதியாக, நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு நிகராக (நகைக்கடைக்காரர் உங்கள் கணக்கில் சேர்க்கும் போனஸ் உள்பட) முதிர்ச்சியடையும் போது நிலவும் தங்க விலையில் தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம். இது மதிப்பு அடிப்படையிலான கொடுப்பனவு அமைப்பு என்று அறியப்படுகிறது.
  • இதே திட்டத்தின் இன்னொரு வகையானது, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அளவு தங்கத்தை உங்கள் கணக்கில் (அப்போது நிலவும் தங்க விலையில்) சேர்ப்பதை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட காலம் முடிவடைந்தவுடன், அதுவரை நீங்கள் சேர்த்த தங்கத்தை, நகைகளாகவோ அல்லது நாணயங்களாகவோ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது எடை அடிப்படையிலான கொடுப்பனவு அமைப்பு ஆகும். ஒரு வகையில், இவை பணத்தை சேமிக்க அனுமதிக்கும் ரெக்கரிங் டெபாசிட் போன்றவை ஆகும்.

சேமிப்புத் திட்டத்தின் மூலமாக தங்கம் வாங்குவதில் உள்ள பலன்கள்

  • நமது பட்ஜெட் நெருக்கடிகளாலேயே பெரும்பாலும் தங்க நகைகள் வாங்கும் எண்ணத்தை நாம் கிடப்பில் போடுகிறோம். ஒரே சமயத்தில் மொத்தமாக பணம் செலுத்துவதற்குப் பதிலாக இந்தத் திட்டம், உங்களின் தங்கம் வாங்குவதை திட்டமிடவும், குறிப்பிட்ட காலத்திற்கு சிறிது சிறிதாக சேகரிக்கவும் அனுமதிக்கிறது.
  • பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள், தங்க சேமிப்புத் திட்டத்தின் கீழ் வாங்கும் நகைகளின் செய்கூலியில் கணிசமான அளவு தள்ளுபடி அளிக்கிறார்கள்.
  • இத்தகையத் திட்டங்களில் பெரும்பாலானவை பராமரிப்பு சேவைகளையும் அளிக்கின்றன. ஆக, இந்தத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது, இலவச ஆயுட்கால பராமரிப்பு, திரும்ப வாங்கிக்கொள்ளும் உத்தரவாதம் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசக் காப்பீடு ஆகியவற்றையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை

  • இந்தத் திட்டத்தின் கீழ் உங்களால் தங்க நகைகள் வாங்க முடிவதற்கு வரையறைகள் இருக்கக்கூடும். உதாரணமாக, சில திட்டங்களில், அளவை மாற்றத் தேவையற்ற தங்க நகைகளை மட்டுமே உங்களால் வாங்க முடியும். இந்த விபரங்களை உங்களின் நகைக்கடைக்காரரிடமிருந்து சரிபார்த்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.
  • காலவரையின் முடிவில் உங்கள் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தை உங்களால் ரொக்கமாக திரும்பப் பெற முடியாது; நீங்கள் தங்கம் வாங்கியாக வேண்டும்.

தங்கம் வாங்குவது உங்கள் பட்ஜெட்டை கணிசமாக ஆக்கிரமிக்கும் என்ற நிலையில், ஒரு தங்க முதலீட்டு திட்டத்தில், சிறு அளவினை தொடர்ந்த இடைவெளியில் டெபாசிட் செய்வது, உங்களின் சவுகரியத்திற்கேற்ப நீங்கள் வாங்க விரும்புவதை சாத்தியமாக்கும். உங்களுக்குக் கிடைக்கின்ற பல்வேறு திட்டங்களைப் பரிசீலனை செய்து, உங்களுக்கு வசதியாக இருக்கும் திட்டத்தினைத் தெரிவுசெய்து, நிங்கள் வாங்க விரும்பும் தங்க நகைக்காக டெபாசிட் செய்யத் தொடங்குங்கள்.