Published: 04 செப் 2017

இந்தியத் திருமணங்களின் தங்கமான அடையாளங்கள்

திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஒன்றுசேரும் புனிதமான பிணைப்பாகும், மேலும் அவை இந்தியர்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியா முழுவதும் திருமண சடங்குகளில் வண்ணமயமான விழாக்கள் மற்றும் ஆடம்பரமான கொண்டாட்டங்கள் ஆகியவை பொதுவானவை ஆகும். திருமண பாரம்பரியம் என்பது திருமண நாள் கொண்டாட்டங்களைவிட அதிகமாக அம்சங்கள் கொண்டவையாகும்; புனித சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவை மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினரால் மத ரீதியாக பின்பற்றப்படுகின்றன.

திருமணத்திற்குப் பின், மணமகள் தனது திருமண நிலையைக் குறிக்கும் சில தங்க ஆபரணங்களை அணிகிறார், அவை திருமண விழாவில் பெறப்பட்ட பெண்களின் சீதனத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் கட்டுரையில், திருமணத்தை அடையாளப்படுத்தும் பல்வேறு தங்க ஆபரணங்களைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம்:

தேஜூர்: காஷ்மீரின் காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் தேஜூர் அணிகிறார்கள், அது மங்களசூத்ராவைப் போன்று கருதப்படுகிறது. இந்தத் தங்க நகைகளானது ஒரு வகையான காதணியாகும், அது இரண்டு காதுகளிலும் மார்பு வரை தங்கச் சங்கிலிகளால் தொங்கிக் கொண்டிருக்கும், இது தங்கள் கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவதைக் குறிக்கிறது.

மங்களசூத்ரா: இந்தக் கழுத்தணியானது திருமணமான தம்பதிகளின் சாதி மற்றும் சமுதாய மரபுகளுக்கு இணங்க பல்வேறு வடிவமைப்புகளில் செய்யப்படுகிறது. மங்களசூத்ரா என்பது திருமணத்தின் மிகவும் பொதுவான அடையாளமாக உள்ளது.

மங்களசூத்ரா என்பது, தமிழ்நாட்டில் தாலிக்கொடி, கேரளாவில் தாலி (இந்துக்கள்) அல்லது மின்னு (கிறிஸ்தவர்கள்), ஆந்திரப் பிரதேசத்தில் புஸ்டெலு, கர்நாடகாவில் கர்தாமணி பதக், பீகாரில் உள்ள டாக்பாக் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இது மங்களசூத்ரா என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மங்களசூத்ராவிலும் அதன் வடிவமைப்புக்கு பின்னால் ஒரு பாரம்பரிய அல்லது ஆன்மீக நம்பிக்கை உள்ளது.

வளையல்கள்: தங்க வளையல்கள் என்பது ஒரு மணமகளின் பதினாறு அலங்காரங்களான "சோலா- சிருங்காரம்" என்பதின் ஒரு பகுதியாகும். திருமண வளையல்கள் என்பது பொதுவாக வழக்கமான வளையல்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் உள்ள திருமணமான பெண்கள், தங்களின் திருமண நிலையான "சௌபாக்கியா" என்பதை அடையாளப்படுத்தும் வகையில், பச்சை நிறக் கண்ணாடி வளையல்களை அணிகிறார்கள். இந்த வளையல்களானது "பட்லி" என்று அழைக்கப்படும் தங்க வளையல்களுடன் அணியப்படுகின்றன.

மேற்கு வங்காளத்தில், மணமகள் தனது தாயால் பரிசளிக்கப்படும், சாகா பாலா என்றழைக்கப்படும் ஓடு மற்றும் பவள வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறார். மணமகளை அலங்கரிக்கும் இந்தச் சடங்கை ஏழு திருமணமான பெண்கள் செய்கின்றனர், இது ஏழு தேவியர்களின் வடிவங்களை அடையாளப்படுத்துகிறது. மணமகள் புதிய வீட்டிற்குள் நுழையும் போது, அவரின் மாமியாரால் அளிக்கப்படும் லோஹா பந்தன் என்பது பாரம்பரிய வளையலாகும். செல்வச் செழிப்புள்ள குடும்பங்கள், சில சமயங்களில், லோஹா பந்தனை தங்கத்துடன் இணைத்து அளிக்கின்றன.

பஞ்சாபி மணமகளின் வளையல்கள் தந்தத்தால் செய்யப்பட்டவை ஆகும், அவை "சுடா" என்று அழைக்கப்படுகின்றன. இந்த சிவப்பு மற்றும் வெள்ளை வளையல்களானது அவரது தாயாரால் பரிசாக அளிக்கப்படுகின்றன. சுடா அணிவிக்கும் விழா என்பது ஒரு பிரம்மாண்டமான விழாவாகும், இது திருமண நாள் அன்று காலையில் நடக்கும்.

இதே போல், திருமண பந்தத்தின் ஏழு உறுதிமொழிகளை ஏற்கும் "சப்தபதி" என்ற புனித சடங்கிற்கு முன்னர், குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மணமக்கள் தந்தத்தால் செய்யப்பட்ட வளையங்களை அணிந்துகொள்கிறார்கள்.

மூக்கு வளையங்கள்:

மூக்கு வளையங்கள் குறித்து முதன்முதலாக பதினாறாம் நூற்றாண்டில் இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டன. ஆரம்பத்தில், முஸ்லீம் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து முஸ்லீம்கள் மட்டுமே அணியும் ஒன்று என்று மூக்கு வளையம் கருதப்பட்டது. மூக்கு வளையங்கள் என்பது இந்து மணமகளின் சோலா சிருங்காரத்தின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது.

மூக்கு வளையங்கள் பொதுவாக மூன்று வகைகளில் உள்ளது: மூக்குத்திகள், மோதிரங்கள் மற்றும் செப்டம் ஆபரணங்கள்.

மகாராஷ்டிராவில் "நாத்" மற்றும் குஜராத்தில் "நாதாடி" ஆகியவை திருமணமானதைக் குறிக்கும் தங்க மூக்கு வளையங்கள் ஆகும். உண்மையில், இந்தி வார்த்தை 'நாத்' என்பதற்கு இறைவன், ஆசான் அல்லது கணவன் என்று அர்த்தமாகும். பஞ்சாபில், மூக்கு வளையம் தங்கத்தால் ஆன சங்கிலியால் கோர்க்கப்படுகிறது, இது பொதுவாக திருமணமான பெண்களின் கருணையைப் பிரதிபலிக்கிறது.

உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றைப் பொறுத்து, நாத் என்பது எந்த அளவிலும் இருக்கலாம் மற்றும் அலங்கரிக்கப்பட்டோ அல்லது அலங்கரிக்கப்படாமலோ இருக்கலாம்.

"லாங்" என்பது வட இந்தியாவில் உள்ள காதணியாகும், இது தென்னிந்தியாவின் மூக்கு அணியான "பூலி" அல்லது "முக்குத்தி", போல் இருக்கிறது, இது அணிந்திருப்பவர் திருமணமானவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

வட இந்தியாவில் செப்டம் வளையமானது 'ப்ளூவாக்' (ஹிந்தி) என்று அழைக்கப்படுகிறது, தென் இந்தியாவில் அது 'புலாக்கு' என்று அழைக்கப்படுகிறது. இந்த வளையத்தை நாத் போன்று எந்த அளவிலும் அல்லது வடிவத்திலும் செய்யலாம்.

மூக்கு-குத்தும் பழக்கம் என்பது வெறுமனே சடங்கு அல்லது பாரம்பரியம் மட்டுமல்ல, இந்த செயல்முறையானது ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைக் கொண்டிருப்பதாக சிலர் நம்புகிறார்கள்.

ஆயுர்வேத கூற்றுப்படி, மூக்கின் இடதுபுறம் என்பது இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புடையதாகும், எனவே இந்தப் பக்கத்தில் குத்திக்கொள்வது பிரசவ (குழந்தைப் பிறப்பு) வலி மற்றும் மாதவிடாய் வலியைக் குறைப்பதற்கு உதவுகிறது.

தங்கம் என்பது புனிதமான மற்றும் மரியாதைக்குரிய அந்தஸ்தைக் கொண்டிருப்பதால், இது எப்போதும் இடுப்புக்கு மேல் மட்டுமே அணியப்படுகிறது. மெட்டிகள் மற்றும் கொலுசுகள் போன்ற இடுப்புக்கு கீழே அணியப்படும் நகைகள் பொதுவாக வெள்ளி அல்லது மற்ற உலோகங்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.