Published: 12 செப் 2017

இந்திய தங்க நகைகளின் பரிணாமத்தை தேசிய அருங்காட்சியகம் வெளிப்படுத்துகிறது

இந்தியத் தங்க நகைகளின் தோற்றமானது கி.மு. 3000-க்கு முன்னர் உள்ளது அல்லது 5,000 வருடங்களுக்கு முற்பட்டது ஆகும். அப்போது முதல், இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக நகைகள் உள்ளன. தங்க நகைகள், புனிதமானவை மற்றும் மங்களகரமானவை என்று இந்தியர்கள் நம்புகிறார்கள்; அவர்கள் பெருமையுடன் அவற்றை அணிந்துகொள்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிக காலம் முதல் இந்திய அரசகுலத்தவர் காலம் வரையிலான ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புது தில்லி, தேசிய அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்து, நகையை விரும்புபவர்கள் மகிழ்ச்சியடையலாம். தேசிய அருங்காட்சியகம் என்பது 1949-ல் நிறுவப்பட்டது. மேலும், அது இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில் ஒன்றாகும். தேசிய அருங்காட்சியகமானது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து நவீன காலம் வரையிலான பல்வேறு கலைப்படைப்புகள் மற்றும் ஆபரணங்களைப் பரவலாகக் கொண்டுள்ளது.

'அலங்காரக் காட்சியகம்' என்பதில் தங்க நகைப்பொருட்களின் மிக விரிவான தொகுப்பை அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. நகைக்காக - அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் காட்சியகமானது, ஆபரணத்தின் அழகு என்ற பொருள் கொண்ட ’அலம்காரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காட்சியகத்தில் சுமார் 250 ஆபரணங்கள் மற்றும் அது தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அலாம்காரா-வின் பொருட்காட்சியில், எளிய அன்றாட உடைகள் – கடவுளர்கள், தேவியர்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோரின் ஆபரணங்கள், மற்றும் குழந்தைகளின் தாயத்துக்கள் - தலைசிறந்த கலைப்படைப்புகள் போன்றவை உள்ளன. இந்த வரலாற்றுப் பயணமானது, கடந்த காலத்தை நோக்கி மீண்டும் பயணிக்க விரும்பும் விருப்பத்தைத் தூண்டுகிறது.

ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகியவற்றின் மணிகள் கொண்ட கழுத்தணிகளானவை, அந்த சகாப்தத்தின் புத்திசாலித்தனமான மற்றும் நேர்த்தியான வேலைப்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் பழங்கால அரசகுலத்தினரால் பயன்படுத்தப்பட்ட அற்புதமான நகைகள், அந்தக் கலைப்படைப்புகளின் பின்னால் உள்ள பொற்கொல்லர்களின் நேர்த்தியான வேலைப்பாடுகளை வெளிப்படுத்துகிறது. பல்வேறு காலங்களில் இருந்து மிகச் சில நகைகள் மட்டுமே எஞ்சியிருந்தாலும், மௌரிய, சுங்க மற்றும் சாத்வாஹனா, குஷானா மற்றும் குப்தா வம்சம் ஆகியவற்றிலிருந்து ஆபரணங்களை அருங்காட்சியகத்தின் அதிகாரிகளால் சேகரிக்க முடிந்தது.

மேலும், அலங்கார காட்சியகத்தின் கலைப்படைப்புகளில் தென்னிந்தியாவின் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த ஓவியங்களானது அதன் படைப்புகளில் தங்கத்தைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுகின்றன, இவை இந்தியர்களின் தங்கத்தின் மீதான மோகத்தை மீண்டும் பறைசாற்றுகிறது. இந்த ஓவியங்கள், பெரும்பாலும் இந்தியப் புராணங்கள் மற்றும் பல்வேறு கடவுள்களின் மற்றும் தேவியர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

அலங்கார காட்சியகத்தில் நாணயக் காட்சியகமும் அமைந்துள்ளது, இது குப்த, முகலாய மற்றும் இந்தோ-பிரித்தானிய காலத்தில் இருந்த நாணயங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. குப்த அரச வம்சத்தின் தங்க நாணயங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன.

அனைத்தையும் வைத்துப் பார்க்கும்பொழுது, தேசிய அருங்காட்சியகமானது இந்திய தங்க ஆபரணங்களின் பரிணாமத்தைக் காட்சிப்படுத்துகிறது. புகழ்பெற்ற அலம்காரா மற்றும் பிற காட்சியகங்கள் ஆகியவை தேசிய அருங்காட்சியகத்தை, தலைநகரான புது தில்லியில் "கண்டிப்பாக பார்க்க வேண்டிய" இடமாக ஆக்குகிறது.