Published: 09 பிப் 2018

தங்கம் உதவிய காலம்

பல பத்தாண்டுகளாக பின்பற்றி வந்த மந்தமான உயிரோட்டமற்றப் பொருளாதாரக் கொள்கையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் விலகி இந்தியா தன்னுடைய பொருளாதாரத் திறனை கட்டவிழ்த்த காலத்துக்கு மாறிய ஆண்டாக 1991 இந்திய வரலாற்றில் நிரந்தரமாகப் பொறிக்கப்படும். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டான 1990, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருந்தது; அந்த ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட நெருக்கடியின் விளிம்பில் நாடு இருந்த நேரத்தில் தங்கம் தான் நம்மைக் காப்பாற்றியது.

1989 ஜூன் மாதம் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி மாறி புதிய ஆட்சி மலர்ந்தபோது, அரசியல் ஸ்திரத்தன்மையற்று கொள்கை உருவாக்குதல் முற்றிலுமாக இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது. 1990 செப்டம்பரில், அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, அதிக இறக்குமதி மற்றும் குறைந்த ஏற்றுமதியின் காரணமாக நிலுவையிலுள்ள பணமளிப்பு விஷயத்தில் சிக்கலை எதிர்பார்த்திருந்தது.

அது சர்வதேச செலாவணி நிதியத்தை (IMF) அணுகி, இந்திய சர்வதேச அளவில் கொடுக்க வேண்டி இருந்த பணமளிப்புகளுக்காக 550 மில்லியன் டாலரைக் கடனாகப் பெற்றது. ஆனால், பணமளிப்பு விஷயத்தில் ஏற்பட்ட நிலுவைக்கான காரணத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது: தேசிய முன்னணி அரசு கவிழ்ந்தது. 1990 நவம்பரில், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் சந்திரசேகர் சிறுபான்மை அரசை நிறுவினார்.

1991 ஜனவரியில், அப்போது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த சின்ஹா IMF இடம் பேசி இரண்டு கடன்களுக்கு அங்கீகாரம் பெற்றார் - முதலாவதாக கடன் பத்திர வகையில் 775 மில்லியன் டாலர், இரண்டாவதாக IMF இன் ஈடு மற்றும் எதிர்பாரா நிதி உதவித் திட்டத்தின் கீழ் 1.02 பில்லியன் டாலர். 1991 பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக அவருடைய அரசு IMF-க்கு வாக்குறுதி அளித்திருந்தது.

பிப்ரவரி மாதத்தின் நடுவில், அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டது. ஆகவே அரசால் முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை பிப்ரவரி 28-ல் சமர்ப்பிக்க முடியவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டது, அந்த நீண்ட செயல்முறை 1991 மே மாதம் தான் நிறைவுபெறும். ஜூன் மாதத்துக்கு முன்னர் எந்த ஒரு அரசும் பதவி ஏற்க வாய்ப்பற்ற சூழலில், நிலுவையிலுள்ள பணமளிப்புகளின் நிலை மேலும் மோசமடைந்தது.

1991 ஏப்ரலில் நடந்த IMF-உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தில், யுஎஸ், ஜப்பான், ஜெர்மனி, யுகே, ஃபிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளைக் கொண்ட எய்ட் இந்தியா கான்ஃப்ரன்ஸ் (இந்தியாவுக்கு உதவும் கூட்டமைப்பில்) அமைப்பிடம் கடன் கேட்கும் தங்கள் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என இந்தியாவின் நிதிச் செயலாளர், எஸ்பி. சுக்லா மற்றும் ஆர்பிஐ கவர்னர் எஸ். வெங்கிடராமன் ஆகியோர் இந்த இரண்டு அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தார்கள்.

சீர்திருத்தங்கள் பற்றிய தங்களின் வாக்குறுதியை அரசியல் காரணங்களால் இந்தியா நிறைவேற்றத் தவறியது பற்றி பொதுவாக ஒரு வருத்தம் இருந்தது. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளிடமிருந்து இந்தியா 700 மில்லியன் டாலர் இடைக்கால கடனாக கேட்டிருந்தது. இந்த பரப்புரை பலனளித்தது; சில நாட்களுக்குப் பிறகு ஜப்பான் வட்டியில்லாக் கடனாக 150 மில்லியன் டாலர் வழங்கியது மேலும் 350 மில்லியன் டாலர் வழங்குவதாகவும் ஒப்புக்கொண்டது. ஜெர்மனி 400 மில்லியன் டாலர் அளித்தது, நெதர்லாந்து 30 மில்லியன் டாலர் வழங்கியது.

இது அந்நியச் செலாவணி கையிருப்பை நெருக்கடியான அளவான 1 பில்லியன் டாலருக்கு மேலே வைத்திருக்க உதவியது, ஆனால் தொழில்துறை கடுமையான இறக்குமதி தட்டுப்பாடை எதிர்கொண்டது. இப்போது இந்திய வங்கிகள் அளித்த பணமளிப்பு உத்தரவாதத்தை, சர்வதேச அளவில் பிரபலமான வங்கிகளின் உத்தரவாதமின்றி ஏற்றுக்கொள்ள வெளிநாட்டு சப்ளையர்கள் மறுத்துவிட்டனர். மே மாதத்தின் தொடக்கத்தில் அரசு, வங்கிக் கடன்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது, இறக்குமதி நிதியுதவி மீது 25 சதவீத கூடுதல் கட்டணத்தை விதித்தது.

நெருக்கடி மேலும் அதிகரித்தது, 1991 மே மாதம் இரண்டாம் வாரத்தில் அரசு அதிகாரிகள் மீண்டும் IMF இடம் சென்று இடைக்கால கடனாக 700 மில்லயன் டாலர் கேட்டனர், இதன் மூலம் சர்வதேச பணமளிப்புகளை இந்தியா தவறாமல் கொடுக்க முடியும். IMF கடன் மிக அத்தியாவசியமானது என்பதை அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நெருக்கடி தீவிரமாக இருந்தது. ராஜீவ் காந்தி, எல்கே. அத்வானி, விபி. சிங் மற்றும் சந்திரசேகர் அனைவரும் இதற்கு ஆதரவாகப் பேசினர்

அப்போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது. தேர்தலின் இடையே மே 21 அன்று ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் - இது அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியது. மீதமிருந்து இடங்களுக்கான தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டியிருந்தது; ஜூன் இறுதி வரை எந்த அரசும் பதவியேற்க இயலாது. உலக வங்கியும் IMF-ம் இந்தியாவுக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டன, ஆனால் அரசு அமைவதற்கு முன்னால் எந்த ஒரு புதிய கடனும் கிடைப்பதாக இல்லை.

அந்நியச் செலாவணி கையிருப்பு 1 பில்லியன் டாலர் அளவுக்கு கிழே சென்றது, எந்த ஒரு காபந்து அரசும் செய்யாத மிகப்பெரிய நடவடிக்கையை சந்திரசேகர் அரசு செய்தது: ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வாங்கிக் கொள்ளும் விருப்பத்தெரிவுடன் 20 டன் தங்கத்தை விற்க முடிவுசெய்தது, இதற்குப் பதிலாக 240 மில்லியன் டாலர் கடனைப் பெற்றது. இந்த விற்பனை மே 30 அன்று நடந்தது, ஒட்டுமொத்த செயல்பாடும் பாரத ஸ்டேட் வங்கியால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. அது தற்காலிகமானதுதான் என்றாலும்கூட, தங்கம்தான் அன்று நாட்டைக் காப்பாற்றியது.