Published: 08 ஆக 2017

தங்கக் கடன்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள தேவையானவை எல்லாம்

Types of Gold Loan
தங்கக் கடன்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள தேவையானவை எல்லாம்

ஒரு நாளுக்கு உள்ளாகவே உங்கள் தங்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் கடன் பெற முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

  1. தங்கக் கடன்கள் என்றால் என்ன?

    தங்க நகையை அடமானமாக வைத்துப் பாதுகாப்பாக பெறப்படும் கடன்கள் தங்கக் கடன்கள். கடன் கொடுப்பவரிடம் உங்கள் தங்க நகையை அடமானமாக வைத்து நீங்கள் கடன் பெறலாம். பொதுவாக தங்கத்தின் மதிப்பின் சதவீதத்தைப் பொறுத்து கடன் தொகை இருக்கும்.  இந்தக் கடனை மாதத் தவணைகளின் மூலம் நீங்கள் திருப்பி செலுத்தலாம். கடனைத் திருப்பி செலுத்திய பிறகு, உங்களது தங்க நகையை நீங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். மிகவும் கணிசமான வட்டி விகிதங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் இந்தக் கடன்களை வழங்குகின்றன. பொதுவாக, திருமணம் அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற திடீர் நிதி இலக்குகளுக்கு கடன் வாங்குபவர்கள் இத்தகைய கடனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கத்தை விற்பதற்குப் பதிலாக, தங்கத்தை வைத்து கடன் பெறுவதையே பலர் விரும்புகின்றனர்.

  2. தங்கக் கடன்கள் எவ்வாறு பணிபுரிகின்றன?

    கடன் அளிப்பவர் ஒருவரிடம் உங்கள் தங்க நகையை நீங்கள் எடுத்துச் சென்று கடனுக்காக அதனை அடமானம் வைத்துக் கொள்ளுமாறு கேட்கவும். அந்த தங்கத்தை கடன் அளிப்பவர் தர நிர்ணயம் செய்வார். அதன் பின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவர் கடன் அளிப்பார். சில தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களது தங்க நகையை தாமாகவே சோதித்து வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மிகவும் விரைவானது. இதற்கு ஒரு நாளாகும்.

  3. தங்கக் கடனுக்கென தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

    தங்கக் கடன் பெறுவதற்கு உங்களது அடையாள சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஓட்டுனர் உரிமம், பான் அட்டை (நிரந்தர கணக்கு அட்டை), பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றை சான்றாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். உங்களிடம் பான் அட்டை இல்லை என்றால், படிவம் 60ஐ நீங்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். விலாச சான்றுக்காக உங்களது மின்சார கட்டணத்தின் ரசீது, ரேஷன் அட்டை (பொது வினியோக அட்டை) அல்லது தொலைபேசி கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். கையெழுத்துக்கான சான்றுக்காக கடவுச்சீட்டின் நகல், ஓட்டுனர் உரிமம் அல்லது வேறு ஏதாவது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.மேலும் உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.  கடன் அளிப்பவர்களில் சிலர் உங்களது வருமானச் சான்றையும் கேட்பார்கள்.

  4. தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

    தங்கக் கடன்கள் பாதுகாப்பானவை. எனவே தனி நபர் கடன்கள் போன்ற பாதுகாப்பற்ற கடன்களை விட தங்க நகைக் கடன்களின் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். வங்கியற்ற நிதி நிறுவனங்கள் வங்கிகளைவிட அதிக விகிதங்களை விதிக்கும். எனவே தங்கக் கடன் பெறுவதற்கு முன் பல்வேறு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தனி நபர் கடனின் வட்டி விகிதமானது 12.75 சதவீதமோ அதற்கு மேலோ இருக்கும். எனவே இதைவிட அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பல்வேறு கடன் அளிப்பவர்களுக்கு இடையில் இது மாறுபடும்.

  5. இதற்கான கட்டணங்களும் இதர தொகைகளும் என்ன?

    நீங்கள் ஒரு கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, கடன் தொகையில் 1% ஐ செயல்படுத்தும் கட்டணமாக கடன் கொடுப்பவர்கள் கேட்பார்கள். ஆவணப்படுத்துதலுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தங்கத்தை தர நிர்ணயம் செய்வதற்கும் கட்டணம் உண்டு. கடன் தொகையின் அளவைப் பொறுத்தும் மாநில விதிகளின் படி முத்திரை கட்டணத்திற்காகவும், புதுப்பித்தல் கட்டணத்தை கடன் கொடுப்பவர்கள் விதிக்கலாம். கடனை தாமதமாக செலுத்தினால் அபராதத் தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். உங்களது கடன் அளிப்பவர் சேவை வரியையும் விதிக்கலாம். நீங்கள் கடனை எப்போது திரும்ப செலுத்த முடிவெடுத்துள்ளீர்களோ முன்னரே திரும்ப செலுத்துவதற்கான கட்டணத்தையும் உங்களுக்கு கடன் அளிப்பவர் உங்களிடமிருந்து பெறலாம். உண்மையில் எவ்வளவு தொகை தேவைப்படும் என்பது கடன் அளிப்பவர்களில் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மாறுபடும். எனவே இவற்றை ஒப்பிட்டுப் பார்க்க தவறாதீர்கள்.

  6. தங்க நகைக் கடன் வாங்குவதற்கான தகுதி யாருக்கு உள்ளது?

    தங்க நகையை சொந்தமாகப் பெற்றுள்ள எவரும் தங்க நகைக் கடன் பெறலாம். சம்பளம் வாங்கும் தொழில் நிபுணர்களோ அல்லது இல்லத்தரசிகளோ அல்லது விவசாயிகளோ, யார் வேண்டுமானாலும் இந்தக் கடன் பெறலாம்.

  7. தங்க நகைக் கடனின் காலம் என்ன?

    தங்க நகைக் கடனுக்கான காலம் பொதுவாகக் குறைவாக இருக்கும். 3லிருந்து 12 மாதங்கள் வரை இருக்கலாம். சில கடன் அளிப்பவர்கள் உங்களுக்கு நீண்ட காலம் வரை அளிக்கலாம். சில கடன் அளிப்பவர்கள் உங்கள் கடனைப் புதுப்பித்துக் கொண்டு நீண்ட காலத்தை அளிக்கலாம்.
    இதற்கான காலம் குறைவாக உள்ளதால், சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கடனை திரும்ப செலுத்தத் தவறினால் நீங்கள் அடமானம் வைத்த தங்கத்தை நீங்கள் இழக்க நேரிடும. கடன் அளித்தவர் அந்தத் தங்கத்தை ஏலம் விட்டு விற்று அந்தக் கடன் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்வர்.

  8. தங்க நகைக் கடனுக்கான தொகையை கடன் அளிப்பவர்கள் எவ்வாறு உறுதி செய்கிறார்கள்?

    தங்கத்தின் கடன் தொகையை உறுதி செய்வதற்காக தங்கத்தின் தூய்மை குறித்தும் எடை குறித்தும் கடன் அளித்தவர்கள் மதிப்பிடுவார்கள். தங்கத்தின் தூய்மை குறித்தும் எடை குறித்தும் மதிப்பிட்ட பின்னர், அதன் அடிப்படையில் தங்க நகை மதிப்பீட்டாளர் அதன் சந்தை மதிப்பை கணக்கிடுவார். சந்தை மதிப்பில் 75 %ஐ உங்களுக்கு கடனாக அளிப்பர். இதற்கு கடனிலிருந்து மதிப்பு விகிதம் (Loan to Value Ratio, LTV) என்று பெயர். எடுத்துக்காட்டாக, உங்களது தங்கத்தின் மதிப்பு ரூ.1 இலட்சமாக இருந்தால், உங்களுக்கு அளிக்கப்படும் கடனின் மதிப்பு ரூ.75,000க்கு மிகாமல் இருக்கும்.
    எனினும், சிலருக்கு குறைந்த பட்ச தொகையும் கிடைக்கலாம். ஏனெனில் கடன் பெறுபவரின் திரும்ப செலுத்தும் திறனையும் கடன் அளிப்பவர்கள் சிந்திப்பார்கள். இருப்பினும், தனி நபர் கடன்களை போல், கடன் வாங்குவரின் பண மதிப்பு (credit score) பரிசீலனை செய்யப்படுவதில்லை.

  9. அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தை எவ்வாறு பாதுகாத்து பராமரிக்கிறார்கள்?

    தங்க நகை எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பது கடன் அளிப்பவருக்கு கடன் அளிப்பவர் வேறுபடும். இருப்பினும் தங்க நகையை சேமித்து வைக்க அதிகபட்ச அக்கறை தேவைப்படுகிறது. இந்தக் கடன் மானியமாக வழங்கப்பட்டவுடன், அடமானமாக எடுக்கப்பட்ட தங்கம் மிகவும் பத்திரமாக வைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்ட, சலன உணரிகள் (motion detectors) கொண்ட மின்னணு பெட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடன் அளிப்பவர்களில் சிலர் நீங்கள் அடமானமாக வைத்த தங்கத்திற்கு காப்பீடும் வழங்குகிறார்கள். இதனால் திருடப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. ஒரு வேளை கொள்ளை போனால், தங்கத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்ற தொகை உங்களுக்கு கிடைக்கும்.

  10. தங்க நகைக் கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது?

    உங்களுக்குக் கடன் அளிப்பவரைப் பொறுத்து, இளகிய முறையில் திரும்ப செலுத்துவதற்கான (flexible repayment) விருப்பத்தேர்வு உள்ளது. பல்வேறு கடன் அளிப்பவர்கள் மாதா மாதம் வட்டியை மட்டும் செலுத்துவதற்கான தேர்வை உங்களுக்கு அளிக்கிறார்கள். அத்தகு தருணங்களில் மூலதனத் தொகை கடன் காலத்தின் இறுதியில் செலுத்தப்படுகிறது. கடனை திரும்ப செலுத்துதற்காக இஎம்ஐ (EMI) அதாவது, சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணை செலுத்தும் வழியும் உள்ளது.

  11. தங்கநகைக் கடன் பெறும்போது நீங்கள் எவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்?

    ஒரு தங்க நகைக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்.
    செய்யக்கூடியவைகள்: வட்டிவிகிதங்களையும் விதிகளையும் ஒப்பீடு செய்யவும். எல்லா கடன் அளிப்பவர்களும் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். சிறந்த வட்டி வகிதத்தையும் மற்ற அம்சங்களையும் அளிப்பவரைத் தேர்ந்தெடுங்கள். அல்லது நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
    செய்யக்கூடாதவைகள்: கடன் தொகையை மட்டுமோ அல்லது சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணையை மட்டுமோ கருத்தில் கொள்ளாதீர்கள். மற்ற கட்டணங்களையும் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். கடனின் மொத்த கட்டணங்கள் என்ன என்று ஒப்பிட்டு சிறந்த கடனைத் தேர்வு செய்யவும்.
    செய்யக்கூடியவைகள்: கடன் அளிப்பவர் நம்பக்கூடியவரா என்று சோதிக்கவும். உங்களது தங்கத்தை நீங்கள் அவரிடம் அளிப்பதால், நம்பிக்கைக்குரிய கடன் அளிப்பவரையே தேர்ந்தெடுங்கள். தவறான பெயர் கொண்டவர்களிடமிருந்து தங்கக் கடன் பெறாதீர்கள்.
    செய்யக்கூடாதவைகள்: தங்க நகைக்கான சமமாக்கப்பட்ட மாதாந்திர தவணையை கட்ட மறக்காதீர்கள். பணத்தை திரும்ப செலுத்த மறக்காதீர்கள். ஏனெனில் இதனால் உங்கள் தங்கத்தை இழக்கக்கூடும்.
    செய்யக்கூடியவைகள்:செயல்படுத்தும் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்கான மற்ற கட்டணங்களை பரிசீலியுங்கள். இளகிய திரும்ப செலுத்தும் முறைகளை நீங்கள் தேர்வு செய்தால் இது மிகவும் அவசியம். நீங்கள் அதிகம் பணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
    செய்யக்கூடாதவைகள்: தேவைக்கு அதிகமான கடனுக்கு விண்ணப்பிக்காதீர்கள். உங்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் நீங்கள் அதனை இழக்க நேரிடும்.

முடிவுரைக்காக:

பொதுவாக தங்க நகைக் கடன்கள் தனி நபர் கடன்களைவிட மலிவானவை. உங்களுக்கு உடனடியான நிதித் தேவை இருந்தால், தங்க நகைக் கடன் உங்களுக்கு உதவும். இதனை செயல்படுத்தும் காலமும் மற்ற கடன்களை விட குறைவு. எனவே விரைவாக பெறலாம்.